Home » Kavithaigal

Kavithaigal

முருகா

muruga
நித்தமுனை நினைந்தேயுருகும்
பக்தன்மனம் நீயறிவாய்
முருகா
சித்தமதில் நல்நினைவேமருகும்
உத்தமனாய் உயர்ந்திடவே
அருள்செய்!

ஏனோ இறைவா

no-water
ஏனோ இறைவா
எனக்கும் புரியவில்லை
என்னவோ குரங்குமனம்

குளத்துநீர் தவளையென
நீரில் சிலநேரம்
கரையில் சிலநேரம்
எதுதான் நன்மையென
எதுதான் தீமையென
தவளைக்கும் தெரியவில்லை
தவிக்கின்ற
மனிதனுக்கும் புரியவில்லை

சாலையில் தருமம்வேண்டி
கையேந்தி பலபேர்
பரிதாபப்பட்டு நானும்
பைதனிலே கைவிட்டால்
மனம்
சோம்பேறிஆவர் உன்னால்
என்று ஒன்றும்
அடப்பாவி
ஏழைக்கு சிறுஉதவி
அதற்குமா
என்று ஒன்றும்

ஏனோ இறைவா
எனக்கும் புரியவில்லை
என்னவோ குரங்குமனம்

மன்னர்

no-water
எல்லோரும் இந்நாட்டு
மன்னரென்று
யார்யாரோ சொன்னார்கள்
ஒருநாளன்று
நானும்தான் இந்நாட்டு
நினைக்கையிலே பெருமிதம்தான்
அப்பொழுது

எந்தன்
உடையிலென்ன கிழிசலென்று
யாருமிங்கே கேட்காதீர்
மன்னவரின் அலங்காரம்
மற்றவர்போல் இருந்துவிட்டால்
மன்னவர்க்கும் மற்றவர்க்கும்
இடையிலென்ன வித்தியாசம்

மன்னர்
உண்ணும் உணவென்ன
யாருமிங்கே கேட்காதீர்
பட்டினியென்று கூறிவிட்டால்
பாதிக்கும் பலர்மனதை
மன்னரின் கௌரவத்தையும்

அதனால் மன்னர்
உண்ணும்வரை விரதமே

இருக்கும் இடமெங்கே
இவர்துயிலும்
அரண்மனையும் எங்கேயெங்கே
உங்கள்ஆவலும் தெரிகிறது
உள்ளத்து
ஆற்றாமையும் புரிகிறது
சாலையில் சலசலநீரோட்டம்
உள்ளே கமகமநாற்றம்
பிளாட்பாரம் என்றிங்கே
பித்தர்பலர் சொல்வார்
இதுதான் இந்நாட்டு
மன்னவரின் மணிமண்டபம்

எல்லோரும் இந்நாட்டு
மன்னரென்று
யார்யாரோ சொன்னார்கள்
ஒருநாளன்று
நானும்தான் இந்நாட்டு
மன்னரென்று
நினைக்கையிலே பெருமிதம்தான்
இப்பொழுதும்…

எட்டாம்நாள் துக்கம்

no-water எங்கள்வீட்டு நீர்குழாய்க்கு
எட்டுநாளாய் கோபமடைந்த
நண்பா
எத்தனைமுறை நானும்தான்
எட்டிபார்த்த போதிலுமே
தண்ணீர்
எட்டிப்பார்க்கவில்லையடா
சொட்டுநீரும் எங்கள்வீட்டில்
பட்டுத்தெரித்து இப்போது
எட்டுநாட்கள் ஆகுதடா

பட்டிதொட்டி பறையடித்து
பட்டுவேட்டி சரசரக்க
சீட்டுகட்டு காரின்மீது
நோட்டுமாலை போட்டுக்கொண்டு
தட்டிநமை தோழா தொண்டாவென
கட்டித்தங்க வார்த்தைவீசி
வெட்டருவாள் மீசைவைத்து
பாட்டுப்பாடும் மந்திரியும்

தண்ணீர்
தொட்டிதனை சுற்றிங்கு
கட்டிவைத்த ரிப்பனை
வெட்டிவிட்டு போனநாளில்
பட்டுத்தெரித்த நீரில்மனமும்
விட்டதுபஞ்சம் என்றேநினைத்தது
ஒருநாள்
விட்டுவிட்டு தண்ணீரை
கொட்டித்தந்த குழாயும்
எட்டுநாளாய் ஏனிப்படி
கெட்டுசதி செய்கிறது
கெட்டமனம் புலம்பலைத்தான்
கேட்டு நல்ல ஆறுதலும்
தட்டியெனைசெல்வதற்கு
நண்பா
உன்னோடு ஒருகுவளை
தண்ணீரும் வேண்டுமடா…

அவள்

unnaipol
அவள்
கன்னங்கரிய நிறம்
காக்கையொத்த நிறம்
மின்னும்வைரமும்தான்
முன்னர்கரியென்பார்

பெண்ணில் கருமையெனில்
பேதமையேனோயிந்த
மண்ணின் மாந்தர்க்கு
கண்ணின் கருவிழியும்
கருப்பென்று அறியாரோ

அருள் கூறும்

போனகதை போனதனால்
போனதுதான் எத்தனையோ
ஆனகதை ஆவதற்கு
அய்யாநீ வழிசெய்யும்

தேனின்கதை தெய்வதமே
தேடியதை தொலைப்பதுதான்
இந்த
ஆணின்கதை அங்கனமா
அய்யாநீ அருள்கூறும்…

மனைவி

unnaipol
என்மனைவி எப்படியோ

இறைவனென்ன
என் சொல்படியா
நல்லதுணை ஒன்றெனக்கு
வல்லவரும் அருள்வாரோ

கத்தும்கிளி குரல்போல
கனியமுது கேட்கவில்லை
செந்தூர சிவப்பழகு
சத்தியமாய்
பொருட்டேயில்லை

தத்திவரும் காலழகு
தளர்ந்துவரும் பின்னழகு
சித்துசெயும் முகஅழகு

எத்தனைநான் பெற்றாலும்
எத்தனாய் தேர்ந்தெடுத்தாலும்
வந்தெனக்கு நிம்மதியை
வார்க்கலையேல் என்னபயன்

விழிதனில் அன்பும்
பேசும்
மொழிதனில் கனிவும்
தமிழைப்போல் இனிமைகாட்டும்
தளிரொன்று இணையானால்
தமிழே
நானுமோர் பாக்கியவானே

உன்னைப்போல்

unnaipol
உன்னைப்போல்
அத்தனையும் மோசம் இல்லை
அன்பே உன்
கண்ணைப்போல் காந்தமிங்கு
ஏதும்இல்லை

என்னைப்போல்
மடையனுந்தான் யாருமில்லை
இருந்தாலும்
உன்னைத்தான் எண்ணியழப்
போவதுமில்லை

விண்ணைப்போல்
காணும்பொருள் உலகில்இல்லை
ஆனாலும்
தொட்டுவிட அருகேதான்
ஒன்றுமேயில்லை

உன்னைத்தான்
நான்நினைக்க காரணமில்லை
தெரிந்தாலும்
சொல்லவிட ஒருவரியில்
வாசகமில்லை

தன்னைப்போல்
பிறரைநினைந்து தவித்துவிட்டேன்
என்றாலும்
என்னைத்தான் நினையாமல்
தவிர்த்துவிட்டாய்

கொன்றாலும்
உன்பெயரே இறுதிவார்த்தை
இன்றல்ல
என்றேனும் என்பெயரை
நினைப்பாயோ !

தாய் பசு

cow-with-baby
கேளுங்கள் நண்பர்களே
என் சோகம்
பாருங்கள் சொந்தங்களே
என் அவலம்

காலையில்
கன்றுதனை எய்தபின்
காம்புகளில் பால்சுரக்கும்
கன்றுதனை இழுத்துக்கட்டி
எந்தன்
கால்களில் கயிற்றைக்கட்டி
பால்
கரந்ததிலும் நீரூற்றி
காசாக்கும் கஞ்சனவன்

என்னை
காட்டுக்கு ஓட்டிவிட்டால்
கதிரவன் விழுகையிலே
வீடுசேர்வேன்
அவனுக்கு
நோட்டுக்கும் பஞ்சமில்லை
நான்படும்
பாட்டுக்கும் பஞ்சமில்லை

துன்பமெலாம் என்னுடன்தான்
துளிர்மகவை தொடவில்லை
என்றேநான் அமைதியுற்றேன்

பசியினில் ஒருநாளில்
அச்சிசுவும்
பரிதவித்து இறந்தது

பாவியந்த அரக்கனவன்
பனிமேவும் மலரெந்தன்
பச்சிளம் கன்றுதனை
கொன்றுவிட்டான்

இறந்ததின் தோலெடுத்து
இளமூங்கில் கால்வைத்து
கன்றுபொம்மை செய்தெந்தன்
காம்பருகே காட்டுகிறான்
நீசனவன்

நீங்களாயும் வேண்டுங்கள்
என்னை மீட்கச்சொல்லி
அவனிடம் அல்ல
இறைவனிடம்
இறப்பின் மூலம்…

நிம்மதி

peace
நிம்மதிக்கும் மனிதனுக்கும்
என்ன சொந்தம்
நித்தியத்தில் காண்பதெல்லாம்
அச்சில்மட்டும்

பத்திரிகை பக்கமெல்லாம்
பரபரப்பாம்
பகுத்தறிந்துஆய்ந்தேன்பின்னும்
அமைதியில்லை

பிறந்தவுடன் உலகறியாக்
கவலையுண்டு
பிற்பாடு படிப்பென்னும்
பிணியுமுண்டு
எப்பாடுபட்டாலும் காதலித்தே
கலவியுறும்
கவலையுண்டு அப்போதெல்லாம்
பிள்ளைக்கும்
பின்னர்வரும் சந்ததிக்கும்
சொத்தெல்லாம்
சேர்த்துவைக்கும் கொள்கையுமுண்டு
எப்போது
நானிங்கு அமைதியுற
என்னிறைவா
நீயேசொல் என்னசெய்வேன்